தமிழ் முரளி · Brahma Kumaris

தமிழ் முரளி · 15 நவம்பர், 2024

ஓம் சாந்தி · BapDada ·

இன்றைய முரளி — today Tamil murli, daily murli in Tamil.

18
முரளி15 நவம்பர், 2024 · தமிழ் (இலங்கை)
0:00--:--

உரையைத் தேர்ந்தெடுக்கவும் → ஹைலைட் / பெட்டி / அடிக்கோடு

15-11-2024
காலைமுரளி
ஓம்சாந்தி
பாப்தாதா
மதுபன்

சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் தந்தையின் நினைவில் எவ்வளவு நேரத்திற்கு இருக்கின்றீர்கள் என்பதைப் பரீட்சித்துப் பாருங்கள். ஏனெனில் நினைவு செய்வதில் இலாபமும், மறப்பதில் நட்டமும் உள்ளது.
கேள்வி: பாவாத்மாக்கள் நிறைந்துள்ள இவ்வுலகில், முற்றிலும் அசாத்தியமான விடயம் எது? அது ஏன்?
பதில்: இங்கே, எவரும் தான் புண்ணியாத்மா என்று கூறுவது முற்றிலும் அசாத்தியமாகும். ஏனெனில், உலகம் கலியுகமாகவும், தமோபிரதானாகவும் உள்ளது. மனிதர்கள் புண்ணியச் செயல்கள் எனக் கருதுபவை, உண்மையில் பாவச் செயல்களாகும். ஏனெனில் அவர்கள் புரியும் செயல்கள் ஏதோவொரு விகாரத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகும்.

ஓம் சாந்தி. குழந்தைகளாகிய நீங்கள் பிரம்மாவின் குழந்தைகளும், பிரம்மா குமாரர்களும், குமாரிகளும் என்பதையும் பின்னர் நீங்கள் தேவர்கள் ஆகவுள்ளீர்கள் என்பதையும் புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் மாத்திரமே இதனைப் புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். ஏனையோர் இதனைப் புரிந்துகொள்ளவில்லை. பிரம்மா குமாரர்களும், குமாரிகளுமாகிய நீங்கள் எல்லையற்றதோர் கல்வியைக் கற்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் 84 பிறவிகளுக்கான கல்வியையும், உலகச் சக்கரத்தையும் கற்பதுடன், நீங்கள் தூய்மையாக வேண்டும் என்ற கற்பித்தலையும் பெறுகின்றீர்கள். இங்கே அமர்ந்திருக்கும்போது, தூய்மையாகுவதற்காக குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாகத் தந்தையை நினைவு செய்கின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இதயத்தை வினவுங்கள்: நான் உண்மையிலேயே தந்தையின் நினைவில் நிலைத்திருந்தேனா அல்லது மாயையான இராவணன் எனது புத்தியை வேறு எங்கேனும் அழைத்துச் சென்றுவிட்டானா? தந்தை கூறியுள்ளார்: என்னை மாத்திரம் நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிந்துவிடும். ஆகையால், இப்பொழுது நீங்கள் உங்களை வினவ வேண்டும்: நான் பாபாவின் நினைவில் நிலைத்திருந்தேனா அல்லது எனது புத்தி வேறு எங்கேனும் சென்றதா? இந்த விழிப்புணர்வு இருக்க வேண்டும்: நான் எவ்வளவு நேரத்திற்கு பாபாவின் நினைவில் நிலைத்திருந்தேன்? எங்கு, எவ்வளவு நேரத்திற்கு எனது புத்தி வேறு எங்கோ சென்றிருந்தது? உங்கள் சொந்த ஸ்திதியை சோதித்துப் பாருங்கள். நீங்கள் எவ்வளவு நேரத்திற்கு தந்தையை நினைவு செய்கின்றீர்கள்? அதன் மூலம் மாத்திரமே நீங்கள் தூய்மையாக முடியும். உங்கள் இலாப, நட்டக் கணக்கை நீங்கள் வைத்திருக்க வேண்டும். நீங்கள் அதனைப் பழக்கப்படுத்திக்கொண்டால், நீங்கள் தொடர்ந்தும் நினைவில் இருப்பதுடன், அதை எழுதிக்கொள்வீர்கள். அனைவருமே தமது சட்டைப்பையில் ஒரு நாட்குறிப்பை வைத்திருப்பதுண்டு. வியாபாரிகள் வைத்திருக்கும் நாட்குறிப்புகள் அனைத்தும் எல்லைக்குட்பட்டவை. உங்கள் நாட்குறிப்பு எல்லையற்றதாகும். ஆகையால், உங்கள் அட்டவணையை நீங்கள் குறித்துக்கொள்ள வேண்டும். தந்தையின் கட்டளை: உங்கள் வியாபாரம் மற்றும் அனைத்தையும் தொடர்ந்தும் செய்யுங்கள். எனினும் என்னை நினைவு செய்யவும் நேரத்தை ஒதுக்குங்கள். உங்கள் கணக்கைச் சோதித்து, தொடர்ந்தும் உங்கள் கணக்கில் இலாபத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள். நட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். நீங்கள் யுத்தம் புரிகின்றீர்கள். எனவே, ஒரு விநாடி உங்களுக்கு இலாபமும், அடுத்த விநாடி நட்டமும் ஏற்படுகின்றது. உங்களுக்கு இலாபமா அல்லது நட்டமா ஏற்பட்டது என்பதை உங்களால் மிக விரைவில் அறிந்துகொள்ள முடியும். நீங்கள் வியாபாரிகள், அப்படித்தானே? அரிதாக சிலராலேயே இந்த வியாபாரத்தைச் செய்யமுடியும். நினைவு செய்வதில் இலாபமும், மறப்பதில் நட்டமும் உள்ளது. இதனையிட்டு நீங்கள் உங்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும். உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற இருப்பவர்கள், தாம் எவ்வளவு நேரம் மறந்த நிலையில் இருந்தோம் என்பதை அறிந்துகொள்வதில் அக்கறை கொண்டிருப்பார்கள். அவர் ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை என்பதையும், அவர் தூய்மையாக்குபவர் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். நாங்கள் உண்மையில் ஆத்மாக்களே. எங்கள் வீட்டில் இருந்து இங்கே இறங்கி வந்த பின்னர், நாங்கள் சரீரத்தை எடுத்து, எங்கள் பாகங்களை நடிக்கின்றோம். சரீரங்கள் அழியக்கூடியன. ஆத்மாக்களோ அநாதியானவை. எங்கள் சம்ஸ்காரங்களும் எங்கள் ஆத்மாக்களிலேயே உள்ளன. பாபா வினவுகின்றார்; ஓ ஆத்மாக்களே, ஞாபகப்படுத்திப் பாருங்கள்: உங்கள் தற்போதைய பிறவியில் சிறுபராயத்தில் இருந்து நீங்கள் தவறான செயல்கள் எதனையாவது செய்திருக்கின்றீர்களா? நீங்கள் மூன்று நான்கு வயதிலிருந்து செய்த செயல்களும், நீங்கள் எப்படி உங்கள் சிறு பராயத்தைக் கழித்தீர்கள் என்பதும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதும் உங்களுக்கு ஞாபகம் இருக்கும். முயற்சி செய்து நினைவு செய்து பாருங்கள். எதனையிட்டாவது உங்கள் மனச்சாட்சி உறுத்துகின்றதா? சத்திய யுகத்தில் எந்தப் பாவச் செயலும் செய்யப்படுவதில்லை. ஆகையால் அங்கே இவ்வாறு கேள்வி கேட்கவேண்டியதில்லை. இங்கே, பாவங்கள் தொடர்ந்தும் செய்யப்படுகின்றன. மக்கள் புண்ணியம் என்று கருதுவனவும் உண்மையில் பாவமேயாகும். இது பாவாத்மாக்கள் நிறைந்த உலகமாகும். உங்கள் தொடர்புகளும் பாவாத்மாக்களுடனேயே உள்ளது. புண்ணியாத்தமாக்கள் இங்கே இருப்பதில்லை. புண்ணியாத்மாக்களின் உலகில், ஒரு பாவாத்மாவேனும் இருப்பதில்லை. மக்கள் காலில் விழுந்து வணங்குகின்ற குருமாரும் புண்ணியாத்மாக்கள் அல்ல. இது தமோபிரதான் கலியுகமாகும். இங்கே புண்ணியாத்மாக்கள் இருப்பது அசாத்தியமாகும். புண்ணியாத்மாக்கள் ஆகுவதற்காக, வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள் என ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையைக் கூவி அழைக்கின்றீர்கள். ஒருவர் அதிக பணத்தைத் தானம் செய்வதாலோ அல்லது தர்மசாலைகள் போன்றவற்றைக் கட்டி, புண்ணியச் செயல்களை அதிகளவு செய்வதாலோ அவர் புண்ணியாத்மா ஆகமுடியாது. இல்லை. திருமண மண்டபங்கள் போன்றவற்றைக் கட்டுவதும் புண்ணியச் செயல் அல்ல. இவ்விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இது இராவணனின் இராச்சியமாகும். இது பாவாத்மாக்கள் நிறைந்த அசுர உலகமாகும். உங்களைத் தவிர வேறு எவருக்கும் இவ்விடயங்கள் தெரியாது. இராவணன் இருக்கின்றான். ஆனால் அவனை எவரும் இனங்காணாதுள்ளார்கள். சிவனின் உருவமும் உள்ளது, ஆனால் அவரையும் எவரும் இனங்காணவில்லை. அவர்கள் பெரியளவில் சிவலிங்கம் போன்றவற்றைக் கட்டுகின்றார்கள். இருப்பினும் அவர் பெயருக்கும் வடிவத்திற்கும் அப்பாற்பட்டவர் என்றும் அவர் சர்வவியாபகர் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். ஆகையாலேயே தந்தை அதர்மம் தழைத்தோங்கும்போது தான் வருவதாகக் கூறுகின்றார். உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்ற தந்தையான சிவபாபா பாரதத்தில் அவதூறு செய்யப்படுகின்றார். மனிதர்களின் வழிகாட்டல்களைப் பின்பற்றியதால், நீங்கள் அவரை அதிகளவில் அவதூறு செய்துவிட்டீர்கள். மனித வழிகாட்டலும், இறை வழிகாட்டலும் பற்றிய புத்தகம் ஒன்றுண்டு. உங்களுக்கு மாத்திரமே இதனைப் பற்றித் தெரியும் என்பதால், ஸ்ரீமத்தைப் பின்பற்றி எவ்வாறு தேவர்கள் ஆகலாம் என்பதை நீங்கள் பிறருக்கு விளங்கப்படுத்துகின்றீர்கள். இராவண வழிகாட்டலைப் பின்பற்றுவதால், நீங்கள் அசுரத்தனம் நிறைந்த மனிதர்கள் ஆகுகின்றீர்கள். மனித வழிகாட்டல்கள் அசுர வழிகாட்டல்கள் என அழைக்கப்படுகின்றன. மக்கள் தொடர்ந்தும் அசுரத்தனமான செயல்களையே செய்கின்றார்கள். கடவுள் சர்வவியாபி என்பதும், அவர் மீனிலும், முதலையிலும் அவதரிக்கின்றார் என்பதுமே அவர்கள் கூறுகின்ற பிரதான விடயங்களாகும். ஆகையால், அவர்கள் அசுரத்தனமாகவும் அழுக்காகவும் ஆகியுள்ளார்கள்! ஆத்மாக்களாகிய நீங்கள் ஒரு மீனிலோ முதலையிலோ பிறப்பெடுப்பதில்லை. நீங்கள் ஒரு மனித சரீரத்திலேயே பிரவேசிக்கின்றீர்கள். நீங்கள் மீனாகவும், முதலையாகவும் ஆகுவதில்லை என்பதையும் அத்துடன் 8.4 மில்லியன் உயிரினங்களில் பிறப்பெடுப்பதில்லை என்பதையும் இப்பொழுது புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது தந்தையின் ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள். குழந்தைகளே, நீங்கள் 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள். 8.4 மில்லியனில் 84 எத்தனை வீதமாகும்? அவர்கள் கூறுவதில் பொய்மையே உள்ளது, அது முற்றிலும் பொய்மையாகும், சற்றேனும் உண்மையில்லை. இதன் அர்த்தத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பாரதத்தின் நிலையைப் பாருங்கள்! சுவர்க்கம் என்று அழைக்கப்பட்ட பாரதம், சத்தியபூமி என்றும் அழைக்கப்பட்டது. அரைக் கல்பத்திற்கு இராம இராச்சியம் உள்ளது. மற்றைய அரைக் கல்பத்திற்கு இராவண இராச்சியம் உள்ளது. இராவண இராச்சியம் அசுர சமுதாயம் என்றும் அழைக்கப்படுகின்றது. வார்த்தைகள் மிக வலிமையானவை. அரைக்கல்பத்திற்கு தேவ இராச்சியம் தொடர்ந்துள்ளது. முதலாம், இரண்டாம் எட்வேர்ட் என உள்ளதைப் போன்று, முதலாம் இலக்ஷ்மி நாராயணன், இரண்டாம் இலக்ஷ்மி நாராயணன், மூன்றாம் இலக்ஷ்மி நாராயணன் போன்றோர் உள்ளனர் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். முதலாவது வம்சமும் பின்னர் இரண்டாவது வம்சமும் உள்ளது. இவ்வாறே அது தொடர்கின்றது. உங்களிடமும் முதலில் சூரிய வம்ச இராச்சியம் இருக்கும். பின்னர் சந்திர வம்ச இராச்சியம் இருக்கும். தந்தை வந்து நாடகத்தின் இரகசியங்களை மிகத் தெளிவாக விளங்கப்படுத்தியுள்ளார். இவ்விடயங்கள் உங்கள் சமய நூல்களில் குறிப்பிடப்படவில்லை. சமய நூல்களில் சில வரிகள் இருக்கின்றபோதிலும், அவற்றை உருவாக்கியவர்களுக்கு எதுவும் புரியவில்லை. பனாரஸிற்கு பாபா சென்றபொழுது, அவருக்கு இவ்வுலகமே பிடிக்கவில்லை. அவர் அங்கு அமர்ந்திருந்து, சுவரில் கோடுகளை வரைவதுண்டு. தந்தையே என்னை அவ்வாறு செய்யத் தூண்டினார். அந்நேரத்தில் நான் ஒரு குழந்தையாக இருந்ததால், எனக்கு முழுமையான புரிந்துணர்வு இருக்கவில்லை. என்னை யாரோ அவ்வாறு செய்யத் தூண்டுகிறார்கள் என்ற உணர்வு மாத்திரமே இருந்தது. நான் விநாசத்தின் காட்சிகளைக் கண்டபோது, உள்ளார்த்தமாக சந்தோஷமும் இருந்தது. இரவில், நான் உறங்கும்போது, நான் பறப்பதைப் போன்றே உணர்ந்தேன். எவ்வாறாயினும் எனக்கு எதுவும் புரியவில்லை. நான் வெறுமனே கோடுகளை மாத்திரம் போடுவேன். ஏதோ ஒரு சக்தி எனக்குள் பிரவேசித்திருப்பதை மாத்திரம் உணர்ந்தேன். நான் வியப்படைவதுண்டு. முன்னர் நான் வியாபாரம் போன்றவற்றைச் செய்தேன். ஆனால் நான் சிலரைப் பார்க்கும்போது, அவர்கள் உடனடியாக திரான்ஸில் சென்றுவிடுவார்கள். நான் வினவுவேன்: என்ன நடக்கின்றது? நான் யாரைப் பார்க்கின்றேனோ, அவர்கள் கண்களை மூடிக்கொள்வார்கள். அப்பொழுது அவர்களிடம், நீங்கள் என்ன பார்த்தீர்கள் என்று வினவினால், நாங்கள் வைகுந்தத்தைப் பார்த்தோம், அல்லது கிருஷ்ணரைப் பார்த்தோம் என்று கூறுவார்கள். இவ்விடயங்களும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஆகையாலேயே நான் அனைத்தையும் துறந்து, எதையாவது புரிந்துகொள்ள முயற்சிப்பதற்காக பனாரஸிற்குச் சென்றேன். நான் நாள் முழுவதும் அங்கு அமர்ந்திருப்பதுண்டு. நான் பென்சிலால் சுவரில் வரைந்து கொண்டிருப்பதைத் தவிர, வேறு எதுவும் செய்யவில்லை. நான் ஒரு சிறு குழந்தையாகவே இருந்தேன்! நான் அவற்றைப் பார்த்தபோது, இனியும் அந்த வியாபாரம் எதனையும் நான் செய்ய விரும்பவில்லை, நான் எனது வியாபாரம் போன்றவற்றை துறக்க வேண்டும் என்றே விரும்பினேன். நான் அந்தக் கழுதைத் தொழிலை விட்டுவிடுவதில் சந்தோஷம் அடைந்தேன். அது இராவண இராச்சியமாகும். இராவணனின் தலையில் கழுதை ஒன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே அது ஓர் இராச்சியம் அல்ல, அது கழுதைத் தொழில் என்றே எண்ணினேன். ஒரு கழுதை மீண்டும் மீண்டும் மண்ணில் புரண்டு, சலவைக்காரர் சுத்தமாகக் கழுவியதை அழுக்காக்கிக்கொண்டே இருக்கும். தந்தை மேலும் வினவுகின்றார்: நீங்கள் என்னவாக இருந்தீர்கள்? நீங்கள் இப்பொழுது என்ன ஸ்திதியை அடைந்துள்ளீர்கள்? தந்தை மாத்திரமே இங்கமர்ந்திருந்து இதனை விளங்கப்படுத்துகின்றார். இந்த தாதாவும் விளங்கப்படுத்துகிறார். இருவரும் இவ்வாறாகவே விளங்கப்படுத்துகிறார்கள். உங்கள் மத்தியில் இந்த ஞானத்தை மிக நன்றாக விளங்கப்படுத்தக்கூடியவர்கள் திறமைசாலிகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமாகவே இருக்கின்றீர்கள். இது ஸ்தாபிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஓர் இராச்சியம் என்பதால், அனைவரும் நிச்சயமாக வரிசைக்கிரமமாக ஓர் அந்தஸ்த்தைப் பெற்றுக் கொள்வார்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்துகின்றீர்கள். ஆத்மாக்கள் சக்கரம், சக்கரமாக தமது பாகத்தை நடிக்கின்றார்கள். அனைவருமே ஞானத்தை ஒரே மாதிரியாகப் புரிந்துகொள்வார்கள் என்றில்லை. இந்த ஸ்தாபனை மிக அற்புதமானது! ஏனையோர் ஸ்தாபனையைப் பற்றிய ஞானத்தைக் கொடுப்பதில்லை. உதாரணமாக, சீக்கிய மதம் ஸ்தாபிக்கப்பட்டபோது, ஒரு தூய ஆத்மா பிரவேசித்தார், சிறிது காலத்தின் பின்னர் சீக்கிய மதம் ஸ்தாபிக்கப்பட்டது. அவர்களின் தலைவர் யார்? குரு நானக். அவர் வந்த பின்னரே, ஜப்சாஹிப் (சீக்கியரின் பிரார்த்தனை) உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில், ஆத்மாக்கள் தூய்மையாக இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் புதியவர்கள். ஒரு தூய ஆத்மா, மகாத்மா என அழைக்கப்படுகின்றார். ஒரேயொரு தந்தை மாத்திரமே பரமன் என அழைக்கப்படுகின்றார். அவர்கள் ஒரு மதத்தை ஸ்தாபிப்பதால் மகான்கள் என அழைக்கப்படுகின்றார்கள். அவர்களைத் தொடர்ந்து அவர்களைப் பின்பற்றுபவர்கள் வரிசைக்கிரமமாக வருகின்றார்கள். 500 வருடங்களுக்கு முன்னர், புதிய ஆத்மா ஒருவர் வந்து, சீக்கிய மதத்தை ஸ்தாபித்தார். அந்த நேரத்தில் எவ்வாறு கிராந்த் இருந்திருக்க முடியும்? சுக்மணி (அமைதித் துதிப்பாடல்) ஜப்சாஹிப் போன்றன அதன் பின்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் என்ன கற்பிக்கின்றார்கள்? அவர்களுக்கு ஆர்வம் உள்ளபோது, அமர்ந்திருந்து தந்தையைப் புகழ்கின்றார்கள். ஆனால் அவர்களின் புத்தகங்கள் போன்றன, அவர்களில் பலர் வந்த பின்னரே எழுதப்பட்டன. ஏனெனில் அவற்றை வாசிப்பதற்கும் மனிதர்கள் தேவை. எல்லா மதங்களும் ஆரம்பித்த பின்னரே அவற்றுக்குரிய சமயநூல்கள் எழுதப்படுகின்றன. பக்தி மார்க்கம் ஆரம்பித்த பின்னரே சமயநூல்கள் வாசிக்கப்படுகின்றன. ஞானம் தேவையாகும். ஆரம்பத்தில், ஆத்மாக்கள் சதோபிரதானாக இருக்கின்றார்கள். அதன் பின்னர் அவர்கள் சதோ, ரஜோ, தமோ ஆகுகின்றார்கள். அதிகளவு வளர்ச்சி அடைந்த பின்னரே, அச்சமயம் புகழ் அடைவதுடன், அதற்குரிய சமயநூலும் எழுதப்படுகின்றது. இல்லாவிடின், எவ்வாறு வளர்ச்சி இருக்க முடியும்? அவர்கள் பின்பற்றுபவர்கள் ஆகவேண்டும். சீக்கிய மதத்திற்குரிய ஆத்மாக்கள் வந்து அந்த மதத்தைப் பின்பற்ற வேண்டும். அதற்கு அதிக காலம் தேவை. புதிதாக வருகின்ற ஆத்மாக்கள் துன்பத்தை அனுபவம் செய்வதில்லை. நியதி அதற்கு அனுமதிப்பதில்லை. ஆத்மாக்கள் தமது சதோபிரதான் ஸ்திதியைக் கடந்து சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளுக்குள் செல்லும்போதே, துன்பத்தை அனுபவிக்கின்றார்கள். இதுவே நியதியாகும். இங்கே, அவர்கள் கலந்து காணப்படுகின்றார்கள். இராவண சமுதாயமும் உள்ளது, இராம சமுதாயமும் உள்ளது. இருப்பினும், நீங்கள் முழுமை அடையவில்லை. நீங்கள் முழுமை அடைந்ததும், உங்கள் சரீரத்தை நீக்குவீர்கள். கர்மாதீத் ஸ்திதியில் உள்ளவர்களுக்கு துன்பம் இருக்கமாட்டாது. அவர்களால் இந்த அழுக்கான உலகில் வாழ முடியாது. அவர்கள் இங்கிருந்து சென்றாக வேண்டும். இங்கிருப்பவர்கள் கர்மாதீதம் அடையாதிருக்கின்றார்கள். அனைவராலும் ஒரே நேரத்தில் கர்மாதீதம் அடைய முடியும் என்றில்லை. விநாசம் இடம்பெற்றாலும், சிலர் எஞ்சியிருப்பார்கள். பிரளயம் இடம்பெற மாட்டாது. இராமர் செல்லும்போது, இராவணனும் சென்றுவிடுகின்றான் என்று பாடப்படுகின்றது. இராவணனின் குடும்பம் மிகப் பெரியதாகும். உங்கள் குடும்பம் மிகச் சிறியதாகும். எண்ணற்ற மதங்கள் உள்ளன. உண்மையில் உங்கள் குடும்பமே பெரிதாக இருக்க வேண்டும். ஏனெனில் தேவ தர்மமே முதலாவதாகும். இப்பொழுது அவர்கள் அனைவரும் கலந்து காணப்படுகின்றார்கள். பலரும் கிறிஸ்தவர்கள் ஆகியுள்ளார்கள். அங்கு சந்தோஷமும், ஒரு அந்தஸ்தும் கிடைக்கும் என்பதை மக்கள் காணும்போது, அவர்கள் அந்த மதத்திற்குரியவர்கள் ஆகிவிடுகின்றார்கள். பாப்பரசர் வரும்பொழுதெல்லாம், பலரும் கிறிஸ்தவர்கள் ஆகிவிடுகின்றார்கள். அவ்வாறே அதிக வளர்ச்சி இடம்பெற்றது. சத்தியயுகத்தில் ஒரு மகனும் ஒரு மகளுமே இருப்பார்கள். வேறு எந்தச் சமயமும் அவ்வாறு வளர்வதில்லை. இப்பொழுது பாருங்கள்! கிறிஸ்தவர்களே அனைவரிலும் அதிக பலம் வாய்ந்தவர்கள். பல குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கு பரிசுகள் கொடுக்கப்படுகின்றன, ஏனெனில் இராணுவத்திற்கும் படைவீரர்களுக்குமான தேவை உள்ளது. அவர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள்: ரஷ்யர்கள், அமெரிக்கர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள் ஆவார்கள். இரு குரங்குகள் சண்டை பிடித்தபோது, இடையில் வந்த பூனை வெண்ணெய் உண்ட கதையும் உள்ளது. இதுவும் நாடகத்தில் உள்ளது. முன்னர், இந்துக்களும் இஸ்லாமியரும் சேர்ந்து வாழ்ந்தார்கள். பிளவு ஏற்பட்டபோதே, பாகிஸ்தான் என்றொரு நாடு உருவாக்கப்பட்டது. இதுவும் நாடகத்தில் உள்ளது. இரு நாடுகள் சண்டையிடும்பொழுது, அவர்கள் ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும்போது, இருவருக்கிடையிலும் வியாபாரமும் இடம்பெறுகின்றது. அதுவே மிகவும் பிரதானமான வியாபாரமாகும். ஆனால் வெற்றியீட்டுபவர்கள் நீங்கள் என்பதே நாடகத்தின் நியதியாகும். உங்களை வேறு எவருமே வெற்றிகொள்ள முடியாது என்பது நூறு வீதம் நிச்சயமாகும். ஏனைய அனைவரும் அழிந்துவிடுகிறார்கள். புதிய உலகில் உங்கள் இராச்சியமே உள்ளது. அதற்குத் தகுதியானவர்கள் ஆகுவதற்காகவே நீங்கள் கற்கின்றீர்கள் என்பதையும் நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். நீங்கள் தகுதியானவர்களாக இருந்தீர்கள், ஆனால் இப்பொழுது தகுதியற்றவர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் மீண்டும் தகுதியானவர்கள் ஆகவேண்டும். மக்கள் பாடுகிறார்கள்: ‘ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!’ ஆனால் அதன் அர்த்தம் என்னவென்பதை அவர்கள் புரிந்து கொள்ளாதுள்ளார்கள். இது ஒரு காடாகும். தந்தை இப்பொழுது வந்துள்ளார். அவர் வந்து, முட்காட்டைப் பூந்தோட்டமாக ஆக்குகின்றார். அது தேவ உலகமாகும். இது அசுர உலகமாகும். முழு மனித உலகினதும் இரகசியம் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் தர்மத்தை நீங்கள் மறந்துவிட்டீர்கள் என்பதையும் உங்கள் தர்மம் அதர்மம் நிறைந்ததாகவும், உங்கள் செயல்கள் பாவகரமானவையாகவும் ஆகியுள்ளதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். செயல்களினதும், பாவச் செயல்களினதும், தூய செயல்களினதும் ஆழமான தத்துவத்தை பாபா உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் நேற்று எவ்வாறு இருந்தீர்கள், இன்று நீங்கள் எவ்வாறு ஆகியுள்ளீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அது நெருங்கி வருகின்றது. அப்படித்தானே? பாபா கூறுகின்றார்: நேற்று, நான் உங்களைத் தேவர்கள் ஆக்கினேன், நான் உங்களுக்கு அந்த இராச்சிய பாக்கியத்தைக் கொடுத்தேன். அதன் பின்னர், அவை யாவும் எங்கே சென்றன? உங்களுக்கு ஞாபகம் உள்ளதா? பக்தி மார்க்கத்தில் நீங்கள் அதிக செல்வத்தை இழந்தீர்கள். அது நேற்றைய விடயமாகும். உங்கள் உள்ளங்கையில் வைகுந்தத்தைத் தரவே தந்தை வருகின்றார். இந்த ஞானம் உங்கள் புத்திக்குள் நிலைத்திருக்க வேண்டும். உங்கள் கண்கள் உங்களை அதிகளவில் ஏமாற்றுகின்றன என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் இந்த ஞானத்தினால் உங்கள் தீய பார்வையை நல்லதாக்கிக் கொள்ள வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளான உங்களுக்கு நமஸ்தே சொல்கின்றார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. உங்களுடைய எல்லையற்ற நாட்குறிப்பேட்டில் உங்கள் அட்டவணையைக் குறித்துக் கொள்ளுங்கள்: நான் எவ்வளவு நேரம் நினைவு செய்தேன்? நினைவு செய்ததன் மூலம் எவ்வளவு இலாபம் ஈட்டப்பட்டது? நட்டம் ஏதும் ஏற்பட்டதா? நினைவு செய்தபோது, எனது புத்தி எங்கே சென்றது?
  2. இப்பிறவியில் உங்களுடைய சிறுவயதில் இருந்து, நீங்கள் செய்த தவறான செயல்களையும், பாவங்களையும் குறித்துக்கொள்ளுங்கள். உங்கள் மனச்சாட்சியை உறுத்துகின்ற விடயம் ஏதாவது இருந்தால் அதனைத் தந்தையிடம் கூறிவிடுங்கள், அதன்மூலம் நீங்கள் இலேசாகிவிடுவீர்கள். நீங்கள் இனிமேலும் பாவச் செயல்கள் எதனையும் செய்யக்கூடாது.
ஆசீர்வாதம்: நீங்கள் கர்ம பந்தனங்களை சேவைக்கான பந்தனமாக மாற்றுவதன் மூலம், அனைவரில் இருந்தும் பற்றற்றவராகவும் இறைவனிடம் அன்புடையவராகவும் ஆகுவீர்களாக.
இறையன்பே பிராமண வாழ்க்கையின் அடிப்படையாகும். ஆனால், நீங்கள் பற்றற்றவராக இருந்தால் மட்டுமே, அதை உங்களால் பெற முடியும். நீங்கள் வீட்டில் உங்களின் குடும்பத்துடன் வசித்தால், அது சேவை செய்வதற்கே ஆகும். கர்மக் கணக்குகளால் அல்லது கர்ம பந்தனங்களால் நீங்கள் அங்கே இருக்கிறீர்கள் என ஒருபோதும் நினைக்காதீர்கள். ஏனென்றால் அது சேவை செய்வதற்கே. நீங்கள் சேவை செய்யும் பந்தனத்தில் கட்டுண்டு இருப்பதன் மூலம், உங்களின் கர்ம பந்தனங்கள் முடிந்துவிடும். சேவை செய்கின்ற உணர்வே இல்லாதபோது, கர்ம பந்தனங்கள் உங்களை இழுக்கும். எங்கே கர்ம பந்தனங்கள் உள்ளனவோ, அங்கே துன்ப அலைகள் இருக்கும். ஆனால் சேவை செய்வதில் சந்தோஷமே இருக்கும். அதனால், கர்ம பந்தனங்களை சேவையின் பந்தனமாக மாற்றி, பற்றற்றவராகவும் அன்பானவராகவும் இருங்கள். நீங்கள் இறைவனால் நேசிக்கப்படுவீர்கள்.
சுலோகம்: ஒரு மேன்மையான ஆத்மா, தனது சொந்த ஆதி ஸ்திதியின் மூலம் ஒவ்வொரு இக்கட்டான சூழ்நிலையையும் வெற்றி கொள்வார்.
 
---ஓம் சாந்தி---

முரளி என்றால் என்ன?

முரளி என்பது பிரம்மா குமாரிகளின் தினசரி ஆன்மீக போதனை; இது ஒவ்வொரு காலையும் மதுபனில் இருந்து வெளியிடப்படுகிறது. இங்கே நீங்கள் இன்றைய முரளியைத் தமிழில் படிக்கலாம், ஆடியோ கேட்கலாம், PDF பதிவிறக்கலாம். படிப்புக்கு உதவியாக உரையை ஹைலைட் செய்யலாம் — உங்கள் குறிகள் இந்த உலாவியிலேயே பாதுகாப்பாக இருக்கும்.

28 மொழிகளில் முரளி

Daily Murli · Madhuban மூலம்: மதுபன் முரளி பிரிவு இது ஒரு தனிப்பட்ட வாசிப்புச் செயலி, அதிகாரப்பூர்வ இணையதளம் அல்ல.