தமிழ் முரளி · Brahma Kumaris

இன்றைய முரளி

ஓம் சாந்தி · BapDada · 25 நவம்பர், 2026

இன்றைய முரளி — தினமும் காலையில் புதியது.

18
பதிவிறக்கு PDF
0:00--:--

உரையைத் தேர்ந்தெடுக்கவும் → ஹைலைட் / பெட்டி / அடிக்கோடு

25-11-2026
காலைமுரளி
ஓம்சாந்தி
பாப்தாதா
மதுபன்

சாராம்சம்: இனிய குழந்தைகளே, சிவபாபாவுக்கு உரியவராகிய பின்னர், எந்தத் தவறுகளையும் செய்யாதீர்கள். தவறுகள் செய்வதால், நீங்கள் தந்தையின் பெயருக்கு அவதூறு ஏற்படுத்துகின்றீர்கள்.
கேள்வி: மிகப் பெரிய குடும்பத்தைக் கொண்டிருப்பவர் யார், எவ்வாறு?
பதில்: சிவபாபாவின் குடும்பமே மிகப் பெரிய குடும்பமாகும். பக்தி மார்க்கத்தில் “நீங்களே தாயும், நீங்களே தந்தையும்” என்று அனைவரும் சப்தமாகப் பாடுகிறார்கள். ஆகவே அவர் ஒரு குடும்பஸ்தர். ஆனால், அவர் சரீர வடிவத்திற்குள் பிரவேசிக்கும் வரைக்கும் அவருக்கு ஒரு குடும்பம் கிடையாது. ஏனெனில் மேலே ஆத்மாக்கள் அசரீரி வடிவத்திலேயே தந்தையுடன் இருக்கின்றார்கள். அவர் இவருக்குள் பிரவேசித்து, சரீர வடிவத்தை எடுக்கும் பொழுதே, அவர் மிகப்பெரிய குடும்பத்தைக் கொண்டவர் ஆகுகின்றார்.

ஓம் சாந்தி. தந்தை துறவறப் பாதைக்கு உரியவரா அல்லது இல்லறப் பாதைக்கு உரியவரா என்பதைக் குறிப்பாக, பாரதமும், பொதுவாக முழு உலகமும் அறியாதுள்ளது. தந்தை வரும்பொழுது, அவர் உங்களை “குழந்தாய், குழந்தாய்” என அழைக்கின்றார். ஏனெனில் நீங்களே அவரை “நீங்களே தாயும், நீங்களே தந்தையும்” என அழைக்கின்றீர்கள், இது அவரை ஒரு குடும்பஸ்தர் ஆக்கியுள்ளது. அங்கு சிவன் அசரீரியானவராக இருக்கின்றார் என்பதை அனைவரும் அறிவார்கள். சிவனுக்கு வடிவமொன்று உள்ள பொழுதிலும், அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவருக்குக் குழந்தைகள் இருப்பார்களாயின், அப்பொழுது ஆத்மாக்கள் அனைவருமே அவருடைய குழந்தைகளே ஆவர். குழந்தைகள் அனைவரும் ஒரேமாதிரி இருப்பதனால், அனைவரும் கடவுளே என்று மக்கள் நினைக்கின்றார்கள். ஆத்மாவும் ஒரு புள்ளி, பரமாத்மாவும் ஒரு புள்ளியே. “நீங்களே தாயும், நீங்களே தந்தையும்” என இல்லறத்தவர்கள் பாடுகின்றார்கள். துறவறப் பாதைக்குரிய சந்நியாசிகள் பிரம்மமே கடவுள் என்று கூறுகின்றார்கள். அவர்கள் ‘நீங்களே தாயும், நீங்களே தந்தையும்’ என்று கூறுவதில்லை. அவர்களுடைய பாதை வேறுபட்டது. இலக்ஷ்மி நாராயணனுக்கு முன்னால் சென்று “நீங்களே தாயும், நீங்களே தந்தையும்” என்ற புகழைப் பாடுவதால், அவர்கள் ஒரு தவறைச் செய்கின்றார்கள். அல்லது அவர்கள் வேறு புகழைப் பாடுகிறார்கள். அவர்கள் பக்தி மார்க்கத்தில் பெருமளவு புகழ் பாடுகிறார்கள். உண்மையில், கடவுள் தந்தை என்பதால், நீங்கள் அவரிடமிருந்து என்ன ஆஸ்தியை, எவ்வாறு பெறுகிறீர்கள்? அவரே தந்தையும், அவரே பாட்டனாரும் (தாதா) என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இவர் (பிரம்மா) சிரேஷ்ட தாயும், அத்துடன் மக்களின் தந்தையான பிரஜாபிதாவும் ஆவார். இவரினூடாக அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, நான் உங்களுடைய தந்தை என்பதால், நானும் இல்லறப் பாதைக்கு வர வேண்டியுள்ளது. இவர் எனது மனைவியும், எனது குழந்தையும் ஆவார். இவருக்குள் பிரவேசிக்கும் பொழுதே, நான் ஒரு குடும்பத்தவர் ஆகுகின்றேன். நான் பரமதந்தை, பரமஆசிரியர், பரமகுரு என்றும் அழைக்கப்படுகின்றேன். ஒரு குரு உங்களுக்கு முக்திக்கு வழிகாட்டுகின்றார். அவர்கள் அனைவரும் பொய்யானவர்கள், இந்த ஒரேயொருவரே சத்தியமானவர். ஆங்கிலத்தில் கடவுளைச் சத்தியமானவர் என்று அழைக்கின்றார்கள். ஆகவே, சத்தியமானவர் வந்து உங்களுக்கு என்ன உண்மையைக் கூறுகின்றார்? எவருக்குமே இது தெரியாது. நீங்களும், நானும் கூட இதனை அறிந்திருக்கவில்லை. இது புதியதொன்றாகும். ஞானக் கடலானவரே சத்திய உலகை ஸ்தாபிப்பவர். அவர் நிச்சயமாக உங்களுக்கு ஏதோவொரு தருணத்தில் சத்தியத்தைக் கூறியதாலேயே, அத்தகைய புகழ் உள்ளது. சத்திய பூமி சுவர்க்கம் என்று அழைக்கப்படுகின்றது. அங்கு அவர்கள் தேவர்களின் இராச்சியத்தைக் காட்டியுள்ளார்கள். இப்பொழுது இது பழைய உலகம், இதுவே பின்னர் புதிய உலகமாக மாறும். பழைய உலகம் தீ மூட்டப்படவுள்ளது. ஸ்தாபனைக்கான வேளையில் விநாசமும் நினைவுகூரப்படுகிறது. கடவுளே கரன்கரவன்ஹார் என்று நினைவுகூரப்படுகின்றார். அவர் பிரம்மாவினூடாக ஸ்தாபனையை மேற்கொள்கின்றார். எவ்வாறு அவர் அதனைச் செய்கின்றார்? அவரே வந்து, அதனை உங்களுக்குக் கூறுகின்றார். மக்கள் எதனையும் அறிய மாட்டார்கள். அவர்கள் கடவுளைக் கரன்கரவன்ஹார் எனக் கூறுகின்றார்கள். இப்பொழுது நீங்கள் நாடகத்தையும் அறிவீர்கள். கலியுகத்தின் இறுதியினதும், சத்திய யுகத்தின் ஆரம்பத்தினதும் சங்கமமே மேன்மையானதாகக் கருதப்பட வேண்டும். கலியுகத்தின் பின்னர், சத்தியயுகம் உள்ளது, பின்னர் நீங்கள் கீழிறங்குகிறீர்கள். சுவர்க்கமும், நரகமும் நினைவுகூரப்படுகின்றன. ஒருவர் மரணிக்கும் பொழுது, அவர் சுவர்க்கவாசி ஆகிவிட்டார் என்று மக்கள் கூறுகின்றார்கள். நிச்சயமாக ஏதோவொரு வேளையில் நீங்கள் சுவர்க்க வாசியாக இருந்திருக்க வேண்டும். குறிப்பாகப் பாரத மக்களே இதனைக் கூறுகின்றார்கள், ஏனெனில் பாரதமே அனைத்திலும் மிகவும் புராதனமான தேசம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகவே நிச்சயமாக இது சுவர்க்கமாகவே இருந்திருக்க வேண்டும். இவ்விடயங்கள் மிகவும் இலகுவானவை! எவ்வாறாயினும், நாடகத்திற்கேற்ப அவர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை, இதனாலேயே தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு வருகின்றார். அவர்கள் அழைக்கின்றார்கள்: ஓ பாபா, வாருங்கள்! வந்து உங்களிடமுள்ள ஞானத்தை எங்களுக்கு வழங்குங்கள். வந்து, தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குங்கள். பின்னர் அவர்கள் கூறுகின்றார்கள்: எங்கள் துன்பத்தை அகற்றி, எங்களுக்குச் சந்தோஷத்தை அருளுங்கள்! எவ்வாறாயினும், அவரால் எந்த ஞானத்தை அல்லது சந்தோஷத்தைக் கொடுக்க முடியும் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். அவரே தந்தை என்பதால், தந்தையின் மூலமாகவே படைப்பு இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். தந்தை என்றால் படைப்பவர். குழந்தைகள் “தந்தை” என்று கூறுவார்களாயின், அவர்கள் படைப்புக்கள் என்றே அர்த்தம். படைப்பானது நிச்சயமாக எங்கோ படைக்கப்பட்டிருக்க வேண்டும். பின்னர், குழந்தைகளுக்குச் சொத்துக்களும் வழங்கப்பட்டிருக்கும். இது பொதுவான ஒன்று. இதனாலேயே ‘நீங்களே தாயும், நீங்களே தந்தையும்’ என்று நீங்கள் என்னை நோக்கிப் பாடினீர்கள். எனவே பாபாவே மிகப் பெரிய இல்லறத்தவர். ‘ஓ தாயும் தந்தையுமானவரே, வாருங்கள்! வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்!’ என்று நீங்கள் அழைக்கின்றீர்கள். தந்தை இருக்கின்றார், ஆனால் ஒரு தாய் இல்லாமல் எவ்வாறு படைப்பு இடம்பெற முடியும்? எவ்வாறு பாபா இங்கு இப்படைப்பை உருவாக்குகிறார்? இது முற்றிலும் புதியதொன்று. இங்கும் பலரது புத்தியில் இது நிலைத்து இருப்பதில்லை. மற்ற இடங்களில் அவர்கள் பரமாத்மாவைத் தந்தையென்று அழைக்கிறார்கள். இங்கு அவரே தாய், தந்தை ஆகிய இருவருமாக இருப்பதால், இது இல்லறப் பாதை ஆகுகிறது. அங்கு அவர்கள் அவரை வெறுமனே தந்தையென்று அழைப்பதால், முக்தி எனும் ஆஸ்தியைப் பெறுகின்றனர்; அவர்கள் தாமதமாகவே வருகிறார்கள். கிறிஸ்தவத்திற்கு முன்னர் பௌத்த சமயம் இருந்ததுடன், அதற்கும் முன்பு இஸ்லாமிய சமயம் இருந்தது என்பதையும் நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஏனைய சமயங்கள் எதுவும் ஏணிப்படத்தில் காட்டப்படாததால், நீங்கள் அதற்கு அடுத்ததாக, சக்கரத்தின் படத்தையும் வைக்க வேண்டும். இது ஒரு கல்விக்கூடம். ஒரு கல்விக்கூடத்தில் ஒரு புத்தகம் மாத்திரம் இருக்க மாட்டாது. ஒரு கல்விக்கூடத்தில் வரைபடங்கள் முதலானவையும் இருக்கும். அந்த உலகக் கல்வியினால் எந்தப் பயனும் இல்லை. வரைபடங்கள் மூலம் மிக விரைவாக மக்களால் புரிந்துகொள்ள முடியும். இவையே உங்கள் பிரதான வரைபடங்கள். அனைத்தும் உங்களுக்கு மிகவும் ஆழமாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கல்லுப்புத்தி உடையவர்களால் புரிந்து கொள்ள முடியாதுள்ளது. கண்காட்சிகளில் நீங்கள் எல்லாவற்றிற்கும் முதல், திரிமூர்த்திப் படத்தில் “அவர் உங்களுடைய பாபாவும், இவர் உங்களுடைய தாதாவும்” என்பதை விளங்கப்படுத்த வேண்டும் என்று பாபா உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். எவ்வாறு அவரால் உங்களுக்கு இந்த ஞானத்தையும், ஆஸ்தியையும் வழங்க முடியும்? பாரத மக்கள் மாத்திரமே இந்த ஆஸ்தியைப் பெறவுள்ளார்கள். பரமாத்மாவாகிய பரமதந்தை பிராமண, தேவ, சத்திரிய தர்மங்களாகிய மூன்று தர்மங்களையும் ஸ்தாபிக்கின்றார். பிரம்மாவின் மூலம் அவர் பிராமணர்களை உருவாக்குகின்றார். இது ஒரு யாகம் ஆகும், இது உருத்திர ஞான யாகம் என்று அழைக்கப்படுகின்றது. முதல்முதலாக சிவ வழிபாடும், அதன்பின்னர் தேவர்களின் வழிபாடும் இருந்ததால், ஏனைய அனைத்துப் பக்தி மார்க்க யாகங்களும் பின்னரே ஆரம்பம் ஆகுகின்றன. அங்கு அந்நேரத்தில் யாகங்கள் இருக்கவில்லை. பின்னரே அவர்கள் யாகங்களை வளர்க்க ஆரம்பிக்கின்றனர். எல்லாவற்றிற்கும் முதலில், அவர்கள் தேவர்களை வழிபட்டு, அவர்களுக்கு மலர்களைச் சாத்தினார்கள். நீங்கள் இந்நேரத்தில் வழிபடத் தகுதிவாய்ந்தவர்கள் அல்ல. மக்கள் சென்று ஏன் சிவனுக்கு எருக்கலம் மலரைப் படைக்கிறார்கள்? தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் அனைவரும் முட்களாக இருந்தீர்கள். சிலர் சதா ரோஜாக்களாகவும், சிலர் ரோஜாக்களாகவும், மற்றவர்கள் மல்லிகை மலர்கள் போன்றவர்களாகவும் ஆகுகின்றார்கள். சிலர் எருக்கலம் மலர்களாகவும் ஆகுகின்றார்கள். முழுமையாகக் கற்காதவர்களே எருக்கலம் மலர்கள் ஆகுகின்றார்கள்; அவர்களால் எந்தப் பயனுமே இல்லை! முட்கள் அனைத்தும் சிவபாபாவிற்கே அர்ப்பணிக்கப்பட்டு, பின்னர் மலர்கள் ஆக்கப்படுகின்றன. எவ்வாறாயினும் பல விதமான மலர்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு பூந்தோட்டத்தில் பல விதமான மலர்கள் உள்ளன. உங்கள் மத்தியிலும் இது வரிசைக்கிரமமாக உள்ளது. சிலர் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார்கள், ஏனையோர் வேறொன்றாக ஆகுவார்கள். இவ்விடயங்கள் அனைத்தையும் தந்தை மாத்திரமே விளங்கப்படுத்துகின்றார். வேறு எவராலும் இவற்றை விளங்கப்படுத்த முடியாது. பக்தி மார்க்கம் மிகவும் சிக்கல் நிறைந்தது. இருப்பினும், அதில் இந்த ஞானம் எதுவும் கிடையாது! தேவர்கள் சத்திய யுகத்தில் இருந்தார்கள், ஆனால் கலியுகத்தில் ஒரு தேவரேனும் இல்லை. எனவே கடவுள் நிச்சயமாக மனிதர்களைத் தேவர்களாக மாற்றியிருக்க வேண்டும். மக்கள் கற்று, தெய்வீகக் குணங்களைக் கிரகித்து, தேவர்கள் ஆகும்வகையில், தந்தை வந்து அத்தகைய செயல்களைக் கற்பித்தார். ஏனைய சமயத்தவர்கள் எதனைக் கற்பிப்பார்கள்? அவர்கள் தமது சமய ஸ்தாபகரைத் தொடர்ந்து இங்கே கீழே வரவேண்டும். அவர்கள் சாதாரணமாகத் தூய்மையின் ஞானத்தை வழங்குகின்றார்கள். கிறிஸ்து வரும்பொழுது, கிறிஸ்தவர்கள் எவரும் இருக்கவில்லை. அவர்கள் அனைவரும் கிறிஸ்துவைப் பின்தொடர்ந்து மேலிருந்து கீழே வருகின்றார்கள். நான்கு பிரதான சமயங்கள் உள்ளன என்பதை பாபா விளங்கப்படுத்தி உள்ளார். சமயங்களை ஸ்தாபித்தவர்களின் நூலே ஒரு சமயநூல் எனப்படுகின்றது. எனவே நான்கு பிரதான சமயங்கள் உள்ளன. ஏனைய அனைத்தும் தொடர்ந்தும் வளர்ச்சி அடைகின்ற, சிறிய சமயங்களாகும். இஸ்லாமிய சமயம் தனது சொந்தச் சமயநூலைக் கொண்டுள்ளது, பௌத்தர்கள் தங்கள் சொந்தச் சமயநூலைக் கொண்டுள்ளனர். ஆகவே இந்த நூல்கள் அனைத்தும் சமயநூல்களாகும். பிராமண தர்மம் இந்த நேரத்திற்கு உரியது. தேவர்களாகப் போகின்ற பிராமணர்களுக்கு வந்தனங்கள் என்று அம்மக்கள் பாடுகிறார்கள். ஆகவே பிரம்மாவின் மூலம் கடவுளினால் உருவாக்கப்பட்ட, வாய்வழித் தோன்றல்களான, பிராமணர்கள் மாத்திரமே உண்மையான பிராமணர்கள் என நீங்கள் லௌகீகப் பிராமணர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். அந்த பிராமணர்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளல்ல. அவர்கள் அதன் அர்த்தத்தை அறியாததால், தம்மைப் பிராமணர்கள் என்று அழைக்கிறார்கள். அவர்கள் பிரம்மபோஜனை உண்ணும் பொழுது, சம்ஸ்கிருதத்தில் வாசகங்களை உச்சரித்து, பிரம்மபோஜனைப் புகழ்கிறார்கள். அந்தப் புகழ் அனைத்தும் பயனற்றது! ‘நீங்கள் எவ்வாறு பிராமணர்களாக இருக்க முடியும்?’ என நீங்கள் அவர்களிடம் வினவ வேண்டும். கடவுள் யார் மூலம் உலகத்தைப் படைக்கின்றாரோ, அந்தப் பிரம்மா முதலில் இருக்க வேண்டும். நாங்களே உண்மையான பிராமணர்கள். பிராமணர்கள் உச்சிக் குடுமியுடன் சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்கள் பல்ரூப வடிவத்தில் பிராமணர்களைக் காட்டுவதில்லை, ஆகவே பிராமணர்கள் எங்கிருந்து வருகின்றார்கள்? நீங்கள் உங்களைப் பிராமணர்கள் என்று அழைக்கின்றீர்கள், ஆனால் பரமாத்மா வந்து பிரம்மாவின் மூலம் புதிய படைப்பை உருவாக்கும் பொழுது மாத்திரமே, உங்களால் பிரமணர்களாக இருக்க முடியும். பின்னர் பிராமணர்களாகிய நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள். சங்கம யுகத்தில் மாத்திரமே பிராமணர்கள் உள்ளார்கள். கலியுகத்தில் அனைவரும் சூத்திரர்கள் ஆவார்கள். பிராமணர்கள் பெருமளவில் புகழப்படுகின்றார்கள். இவ்விடயங்கள் அனைத்தையும் பாபா உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அல்பாவும், பீற்றாவும் உள்ளன, ஏனைய அனைத்தும் விபரங்களாகும். நீங்கள் பக்தியைப் பற்றியும் விளங்கப்படுத்த வேண்டும். பாபா கூறுகின்றார்: நீங்கள் பக்தர்கள் இல்லை, அல்லவா? பாபா ஒருபொழுதும் கோபப்படுவதில்லை. தந்தை ஒரு விளக்கத்தைக் கொடுப்பார், அப்படித்தானே? குழந்தைகள் தவறு செய்தால், யாருடைய பெயர் இகழப்படும்? சிவபாபாவின் பெயரே. இதனாலேயே குழந்தைகளாகிய உங்களின் சொந்த நன்மை கருதி, பாபா உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கிறார். உதாரணத்திற்கு இவர் ஒரு தவறைச் செய்தால், அதனை அந்த ஒரேயொருவர் சரிப்படுத்துவார் என்பது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவரே மூத்த குழந்தை என்பதால், அதிலும் நன்மை இருக்கும். அனைத்தும் இவரில் தங்கியிருப்பதுடன், இவரின் மூலமாக எந்த இழப்பும் இடம்பெறாது. “இதனைச் செய்யுங்கள்” என இவர் கூறும்பொழுது, நீங்கள் அதைச் செய்ய வேண்டும். அப்பொழுது ஓர் இழப்பில் இருந்தும் நன்மையே வெளிப்படும். இழப்பு என்ற கேள்விக்கே இடமில்லை. ஒவ்வொரு விடயத்திலும் நன்மை அன்றி, வேறு எதுவுமில்லை. எந்த இழப்பும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அனைவரும் தொடர்ந்தும் தவறுகள் செய்கின்றார்கள். எவ்வாறாயினும், தந்தையே நன்மையளிப்பவர் ஆகையால், நிச்சயமாக அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் நன்மை இருக்க வேண்டும். அனைவரும் நன்மையடைய வேண்டும். அவர் அனைவருக்கும் சற்கதி அருள்கின்றார். இப்பொழுது இது அனைவரதும் கணக்குத் தீர்க்கும் காலமாகும். அனைவரது தலை மீதும் பாவச்சுமை உள்ளதால், அனைவரது கர்மக் கணக்குகளும் தீர்க்கப்பட வேண்டும். தண்டனை கொடுப்பதற்கு அதிகக் காலம் எடுக்காது. ஒரு விநாடியில் ஜீவன்முக்தி பெறப்படுகிறது. எனவே, காசியில் மக்கள் தம்மை அர்ப்பணித்து, சரீரங்களை நீக்குவது போல், பாவங்களுக்கான தண்டனையையும் ஒரு விநாடியில் அனுபவம் செய்ய முடியாதா? எவ்வாறாயினும் அவர்கள் சென்று சிவபாபாவைச் சந்திப்பார்கள் என்றில்லை; இல்லை. அவர்களின் கடந்த காலத்தின் பாவக் கணக்குகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, பின்னர் புதிதாக ஆரம்பிக்கின்றன. சக்கரத்தின் மத்திய காலப் பகுதியில் எவராலும் வீடு திரும்ப முடியாது. இந்த ஞானம் ஒரு விநாடிக்கு உரியது என்றாலும், நீங்கள் இன்னமும் கற்க வேண்டும். ஞானக் கடலான சிவபாபாவின் ஆத்மா வந்து, தினமும் உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஸ்ரீகிருஷ்ணர் ஒரு சரீரதாரி, அவர் மறுபிறப்பு எடுக்கின்றார். பாபா பிறப்புக்கு அப்பாற்பட்டவர். கற்க விரும்பாதவர்கள் நிச்சயமாகத் தடைகளை உருவாக்குவார்கள். நிச்சயமாக யாகத்திற்குத் தடைகள் இருப்பதுடன், அப்பாவிகள் தாக்கவும் படுவார்கள். அவர்கள் சென்ற கல்பத்தில் செய்தது போன்றே இவ்விடயங்கள் அனைத்தும் இடம்பெறுகின்றன. அசுரர்கள் அதிகளவு குழப்பங்களை உருவாக்குகின்றார்கள்; அவர்கள் படங்களைக் கூட கிழித்தெறிகின்றார்கள். சிலசமயங்களில், அவர்கள் அனைத்திற்கும் தீ மூட்டவும் தயங்க மாட்டார்கள். எங்களால் என்ன செய்ய முடியும்? இது நிச்சயிக்கப்பட்டுள்ளது என நாங்கள் உள்ளாரப் புரிந்து கொள்கின்றோம். வெளியில் இதனைக் காவல்துறைக்கு முறையிட வேண்டும். எதுவெல்லாம் சென்ற கல்பத்தில் நடந்ததோ, அதுவே மீண்டும் நடைபெறும் என்பதை உள்ளார நாங்கள் புரிந்து கொள்கிறோம். இதில் துன்பம் என்ற கேள்விக்கு இடமில்லை. சலவைத் தொழிற்சாலையில் ஏதாவதொன்று தவறி விட்டால், நிச்சயமாக ஓர் இழப்பு உள்ளது, ஆனால் பின்னர் வேறொன்று தயாரிக்கப்படும். பாபா ஏற்கனவே உங்களுக்குக் கூறியுள்ளார்: நீங்கள் கண்காட்சிகள் போன்றவற்றை நடாத்தும் பொழுது, அந்த இடத்தை எட்டு நாட்களுக்குக் காப்புறுதி செய்து கொள்ளுங்கள். அவர் நல்லவராக இருப்பின், உங்களிடம் இருந்து கட்டணம் ஏதும் அறவிட மாட்டார். நீங்கள் காப்புறுதி செய்யாவிட்டால் என்ன நடக்கும்? பின்னர் மிக நல்ல புதிய படங்கள் உருவாக்கப்படும். ஒவ்வோர் அடியிலும் பலமில்லியன் வருமானம் ஈட்டப்படும். உங்களுடைய ஒவ்வொரு விநாடியிலும் எடுக்கப்படுகின்ற, ஒவ்வோர் அடியும் மிகவும் பெறுமதி வாய்ந்தது. நீங்கள் பல்கோடீஸ்வரர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் பாபாவிடம் இருந்து 21 பிறவிகளுக்கு ஆஸ்தியைப் பெறுவதால், மிக நன்றாக விளங்கப்படுத்த வேண்டும். அங்கே சுவர்க்கத்தில் நீங்கள் எல்லையற்ற செல்வத்தைக் கொண்டிருப்பீர்கள். அதனைக் கணக்கிடுதல் என்ற கேள்வியே கிடையாது. பாபா உங்களை அதி செல்வந்தர்களாகவும், சந்தோஷமானவர்களாகவும் ஆக்குகின்றார். நீங்கள் பெறும் வருமானம் மிகவும் பெரியது. பிரஜைகளும் அதிசெல்வந்தர்கள் ஆகுகின்றார்கள். இது 21 பிறவிகளுக்கான உங்கள் வருமானத்தின் மூலாதாரம். இது மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகுவதற்கான கற்குமிடம். உங்களுக்குக் கற்பிப்பது யார்? தந்தையே ஆவார். ஆகவே அத்தகைய கல்வியில் நீங்கள் கவனயீனமாக இருக்கக்கூடாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. இந்த நன்மை நிறைந்த யுகத்தில் அனைத்திலும் நன்மை உள்ளது என்ற விழிப்புணர்வைச் சதா கொண்டிருங்கள். நாங்கள் எந்த இழப்பையும் அனுபவம் செய்ய முடியாது. அனைத்திலும் நன்மை உள்ளது எனக் கருதுவதால், சதா கவலையற்றவராக இருங்கள்.
  2. சதா ரோஜாக்களாக இருப்பதற்கு, கல்வியில் முழுக் கவனம் செலுத்துங்கள். கற்பதில் கவனயீனமாக இருக்காதீர்கள். எருக்கலம்பூ ஆகாதீர்கள்.
ஆசீர்வாதம்: அமிர்தவேளையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதன் மூலமும் அதை மிகச்சரியாகப் பயன்படுத்துவதன் மூலமும் சதா சக்தியால் நிரம்பியவர் ஆகுவீர்களாக.
உங்களை சக்தியால் நிரம்பியவர் ஆக்கிக் கொள்வதற்காக, ஒவ்வொரு நாளும் அமிர்த வேளையில், உங்களின் சரீரத்தாலும் உங்களின் மனதாலும் சுற்றுலா செய்யுங்கள். அமிர்த வேளையில், காலை வேளையின் உதவி உங்களுக்கு இருக்கும். அத்துடன் சதோபிரதான் ஸ்திதியில் இருக்கும் புத்தியின் உதவியும் கிடைக்கும். ஆகவே, ஆசீர்வதிக்கப்பட்ட அந்த நேரத்தில், மனமும் சக்திவாய்ந்த ஸ்திதியில் இருக்க வேண்டும். சக்திவாய்ந்த ஸ்திதி என்றால், தந்தையைப் போன்ற விதை ஸ்திதியைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். சாதாரணமான ஸ்திதியில் உங்களால் தொடர்ந்து செயல்களைச் செய்ய முடியும். ஆனால் அந்த ஆசீர்வதிக்கப்பட்ட நேரத்தை மிகச்சரியான முறையில் பயன்படுத்துங்கள். உங்களின் பலவீனங்கள் அனைத்தும் முடிவடைந்துவிடும்.
சுலோகம்: உங்களின் சக்திகள் என்ற பொக்கிஷத்தால், புற ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள சக்தியற்ற ஆத்மாக்களைச் சக்திசாலிகள் ஆக்குங்கள்.
 
---ஓம் சாந்தி---

அவ்யக்த சமிக்ஞை: தந்தை பிரம்மாவைப் போல், சம்பூரணமான, முழுமையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

தந்தை பிரம்மா தொடர்ந்தும் சப்தத்திற்கு அப்பால் இருக்கின்ற பயிற்சியைச் செய்து, சதா தனது மேன்மையான ஸ்திதியில் ஸ்திரமாக இருந்தார். இதனைச் செய்ததால், அவர் வெளிப்படையான கவர்ச்சிகள் அனைத்திற்கும் அப்பாலிருந்து, பற்றற்ற அன்பான ஸ்திதியைப் பேணினார். அவ்வாறாகவே, குழந்தைகளாகிய நீங்களும் மேன்மையான ஸ்திதியில் நிலைத்திருக்கின்ற பயிற்சியைத் தொடர்ந்தும் செய்ய வேண்டும். அதன் பின்னர், நீங்கள் செயலுக்கு வரும் போது, நீங்கள் தொடர்ந்தும் விசேடமாக மௌனசக்தியை அனுபவம் செய்வீர்கள். இந்தப் பயிற்சியுடன், நீங்கள் தந்தையைப் போன்று சம்பூர்ணமும் முழுமையும் அடைவீர்கள்.

முரளி என்றால் என்ன?

முரளி என்பது பிரம்மா குமாரிகளின் தினசரி ஆன்மீக போதனை; இது ஒவ்வொரு காலையும் மதுபனில் இருந்து வெளியிடப்படுகிறது. இங்கே நீங்கள் இன்றைய முரளியைத் தமிழில் படிக்கலாம், ஆடியோ கேட்கலாம், PDF பதிவிறக்கலாம். படிப்புக்கு உதவியாக உரையை ஹைலைட் செய்யலாம் — உங்கள் குறிகள் இந்த உலாவியிலேயே பாதுகாப்பாக இருக்கும்.

28 மொழிகளில் முரளி

Daily Murli · Madhuban மூலம்: மதுபன் முரளி பிரிவு இது ஒரு தனிப்பட்ட வாசிப்புச் செயலி, அதிகாரப்பூர்வ இணையதளம் அல்ல.